கொடைக்கானல்: கொடைக்கானல் நட்சத்திர ஏரியில், நகராட்சி சார்பில் நடந்த தூய்மைப் பணியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 25 டன் குப்பை, 5 டன் மதுபாட்டில் அகற்றப்பட்டுள்ளன. இதனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் ஒன்றாக நட்சத்திர ஏரி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானல் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 3 மாதங்களாக ரூ.பல லட்சம் செலவில் ஏரியில் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி ஏரியில் படகுகள் மூலம் குப்பைகளை தூர்வாருகின்றனர். மேலும், கரையில் வளர்ந்திருந்த புதர்ச்செடிகள், களைச்செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து நகராட்சி பொறியாளர் (பொ) செல்லத்துரை கூறுகையில், ‘‘40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், படகுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பணியின்போது 25 டன் குப்பைகள் மற்றும் 5 டன் மது பாட்டில்கள் ஏரியில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. தற்போது தூய்மைப்பணி விரைந்து நடந்து வருகிறது. அடுத்த ஒரு மாதத்திற்குள் பணி நிறைவடைந்துவிடும். ஏரிக்கரையில் குப்பைகள் வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். கொடைக்கானல் நகருக்கு அழகு சேர்க்கும் நட்சத்திர ஏரியில் டன் கணக்கில் குப்பைகளும், மதுபாட்டில்களும் அகற்றிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் 25 டன் குப்பை, 5 டன் மதுபாட்டில் அகற்றம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.