சென்னை: கொளத்தூரில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். கொளத்தூர் செந்தில்நகர் 1வது மெயின் ரோடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தேவராஜ் என்பவர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் உள்ளிட்ட கடைகளை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன் மேற்பார்வையில், செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர்.
பின்னர், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மாநகராட்சிக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் டாஸ்மாக் பார் போன்றவற்றை இடித்து அகற்றினர். அப்போது, தேவராஜ் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் சென்னை மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். கொளத்தூர் தாசில்தார் அபர்ணா உள்ளிட் டோரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கிரமைப்பு அகற்றுவதை பார்வையிட்டனர். நேற்று மாலை 4 மணியளவில் அனைத்து ஆக்கிரமைப்பும் அகற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட நிலத்தை நிர்வகித்து வந்த தேவராஜ் தரப்பினர் மீண்டும் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக கூறப்படுகிறது.
The post கொளத்தூரில் ரூ.20 கோடி மாநகராட்சி நிலம் மீட்பு appeared first on Dinakaran.