திருப்பூர்,: தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடைக்காலம் இருந்து வந்தது. ஆனால், பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதலே தமிழகத்தின் வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வழக்கத்தை காட்டிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள தற்போது பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களின் பார்வை இயற்கையாக குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதும், உடலுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடியதுமான மண்பாண்ட பொருட்களின் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இதற்காக, வழக்கமான மண்பாண்ட பொருட்கள் மட்டுமல்லாது பல புதிய பொருட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வழக்கமான மண்பானையை காட்டிலும் பிளாஸ்டிக் கேன்களில் உள்ளது போல் குழாய் பொருத்திய மூடியுடன் கூடிய மண்பானைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு பதிலாக மண்பாண்டத்தால் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில், தண்ணிர் சப்ளை செய்யக்கூடிய குவளை, டம்ளர் என புதிய பொருட்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குழாய் பொருத்திய மண்பானை ரூ.500 முதல் அளவு மற்றும் வேலைபாடுகளுக்கேற்றவாறு விலையிலும், வாட்டர் பாட்டில், குவளை ஆகியவை ரூ.200 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மண்பாண்ட வியாபாரி லட்சுமி கூறுகையில், ‘‘மண்பாண்ட பொருட்களிலும் பொதுமக்கள் நவீன வசதிகளுடன் எதிர்பார்க்கின்றனர். அதன் காரணமாக சாதாரண பானையை விட குழாய் பொருத்திய பானைகள், வாட்டர் பாட்டில் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கோடை வெயில் தற்போது துவங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்வார்கள் என எதிர்பார்க்கின்றனர். மேலும், மணப்பாறை பகுதிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட இந்த பொருட்களை திருப்பூரில் விற்பனை செய்து வருகிறோம். சரியான மணல் கிடைக்காதது, கைவினைஞர்கள் இல்லாதது ஆகியவற்றால் உள்ளூரிலேயே பாணை உற்பத்தி செய்வது என்பது குறைந்து வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கின்றோம். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும் மண்பாண்ட பொருட்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியது. அதிக நேரம் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க கூடியது’’ என்றார்.
The post கொளுத்தும் கோடை வெயில் புதிய வடிவிலான மண்பாண்ட பொருட்களுக்கு மவுசு appeared first on Dinakaran.