கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் அப்பகுதியில் உள்ள 100 ஏக்கருக்கு மேலான வயல்களில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் வடிகால் வாய்க்காலாகவும் பயன்பெற்று வருகிறது. இந்த வாய்க்காலை முறையாக தூர்வாராததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. கடந்த மாதம் பருவம் தவறி பெய்து வயல்களில் தேங்கிய மழைநீரை வடிகால் வாய்க்காலில் வடிய வைக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
புதர் மண்டி கிடப்பதால் வடிகால் வாய்க்காலில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதுடன் வயல்களில் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே வடிகால் வாய்க்காலை ஒரு கிமீ தூரத்துக்கு தூர்வாரினால் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க முடியும். மேலும் அவ்வப்போது பெய்யும் மழைநீரை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொள்ளிடத்தில் புதர் மண்டிய வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.