*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
செய்யாறு : செய்யாறில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் சப் கலெக்டர் பல்லவி வர்மா தலைமையில் நேற்று நடந்தது. தாசில்தார் அசோக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரிஜா, தோட்டக்கலை துறை அலுவலர் தொல்காப்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கை பின்வருமாறு, வேளாண் விரிவாக்க மையங்களில் தரமான விதைகள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு வேளாண்மை அலுவலக வளாகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
தாசில்தார் துரைராஜ், பிடிஓ பரிமேலழகன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர். கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கூட்டரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வருவாய் கோட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் (வேளாண்மை) மற்றும் வட்டாட்சியர் ஜான்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வேளாண்மைத்துறையில் மூலம் உணவு தானிய உற்பத்தியில் அதிக மகசூலில் முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு பரிசு தொகை வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு கீழ்பென்னாத்தூர் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
அதனைதொடர்ந்து, கோடைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை கால்நடை மருத்துவர்கள் வழங்கிடவேண்டும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பாரம்பரிய ரகம் மற்றும் இயற்கையான முறையில் சாகுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆரணி: மேற்கு ஆரணி வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்பா தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பவ்யா, கவுசிகா, தாசில்தார் கவுரி, வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆரணி ஆர்டிஓ பொறுப்பு ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசாயிகள் பேசினர்.
டவுன் பஸ் இயக்க கோரிக்கை
கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டிடத்தில் நேற்று வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தாசில்தார் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. பிடிஓ அண்ணாமலை சமூக பாதுகாப்பு தாசில்தார் லலிதா, வனவர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
வேளாண் அலுவலர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மேல் சோழங்குப்பம் கிராமத்திலிருந்து கலசபாக்கம் வரை அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். இந்த வழியாக டவுன் பஸ் இயக்கினால் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெறும். எனவே டவுன் பஸ்சை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
The post கோடைகாலத்தில் கால்நடைகளை பாதுகாக்க தொழில்நுட்ப ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.