களக்காடு: கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் தலையணை உள்ளது. இங்கு ஓடி வரும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதாலும், மூலிகைகளை தழுவியபடி வருவதாலும் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அத்துடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டது.
பின்னர் வெள்ளம் தணிந்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே களக்காடு பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சுட்டெரிக்கும் வெயில் காணப்படுகிறது. அதிகாலையில் பனிபொழிவும் உள்ளது. இதன் காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீர் கொட்டுகிறது. வரும் நாட்களில் தண்ணீர் வரத்து மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை காலங்களில் வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்ப தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நீர் வற்றி வருகிறது.
கோடை மழை பெய்தால் மட்டுமே தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் சூழல் நிலவுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். நீர்வரத்து குறைந்து வருவதால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
The post கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே களக்காடு தலையணையில் நீர்வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் கவலை appeared first on Dinakaran.