ஊட்டி : கோடை சீசன் நெருங்கிய நிலையில், ரோஜா பூங்காவில் புல் மைதானத்திலும் புதிய மண் கொட்டப்பட்டு, புல் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் கோடை சீசன் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டும், கவருவதற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதில், முக்கியமான நிகழ்ச்சிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடக்கும் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடக்கும் பழக்கண்காட்சியாகும்.
கோடை சீசன் நெருங்கிய நிலையில், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவைகள் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்தில் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்துவது வழக்கம். இதனால், இப்பூங்கா முன்னதாகவே தயார் செய்யப்படும். கடந்த மாதம் இப்பூங்காவில் உள்ள ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது செடிகளை பராமரிக்கும் பணியில் பூங்காக ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நாள் தோறும் கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ரோஜா செடிகளுக்கு தற்போது இயற்கைஉரமிடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களில் ரோஜா செடிகள் வளர்ந்து விடும்.
இந்நிலையில், தற்போது ரோஜா பூங்காவில் உள்ள புல் மைதானங்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்கா போன்று, இங்கும் புல் மைதாவனங்களில் புதிய மண் கொட்டப்பட்டு புல் மைதானம் சமன் செய்யும் பணிகளும், இயற்கை உரமிடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண் கொட்டு பணிகள் முடிந்தவுடன் நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சி புற்கள் வளர்க்கும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட துவங்குவர். ஏப்ரல் மாதம் முதல் இந்த பூங்காவில் புல் மைதானங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கும்.
The post கோடை சீசன் நெருங்கிய நிலையில் ரோஜா பூங்கா புல் மைதானத்தில் புதிய மண் கொட்டி சீரமைக்கும் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.