செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் பகுதியில் கோடைகாலம் துவங்கும் முன்பே வெயில் சுட்டெரிப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், பரசலூர், மேலப்பாதி, மேலையூர், ஆக்கூர், மடப்புரம், தலைச்சங்காடு, மேலப்பாதி, கஞ்சாநகரம், கருவிழந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் தான் வெயில் சுட்டெரிக்கும். ஆனால் தற்போது மாசி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைப்பதால் உஷ்ணம் தாங்க முடியாமல் டூவீலர்கள், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆக்கூர் முக்கூட்டு வழியாக தரங்கம்பாடி, செம்பனார்கோயில், சீர்காழி, பூம்புகார், சின்னங்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியும். இதனால் மேற்கண்ட சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
பொதுமக்களின் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் ஆக்கூர் முக்கூட்டு மற்றும் செம்பனார்கோயில் கடைவீதி சாலை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மிகவும் அவசியமான பணிகளுக்கு செல்வோர் மட்டுமே வேறு வழியின்றி சுட்டெரிக்கும் வெயிலில் செல்லும் நிலை ஏற்படுகிறது. தற்போது மாசி மாதத்திலேயே வெயில் அதிகமாக இருப்பதால் சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மேலும் கடுமையாக வெயில் சுட்டெரிக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
The post கோடை துவங்கும் முன்பே வெயில் கொடுமை செம்பனார்கோயில் பகுதியில் சாலைகள் வெறிச்சோடியது appeared first on Dinakaran.