ஈரோடு : கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக, பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனையொட்டி, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
அந்த வகையில், ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நேற்று துவங்கியது. இப்பணிகள் மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் படியும், வழிகாட்டுதல்களின் படியும், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. 4 மண்டலங்களில் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது: பள்ளிகள் ஜூன் 2ம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையொட்டி, மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் நேற்று முதல் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வரும் 31ம் தேதி வரை மேற்கொள்ளப்படும்.
இதில், அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து, கரும்பலகைகள் பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்தல், ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் என இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை அகற்றுதல், பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல், புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல், காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கான சமையல் அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன் சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டுப் பயன்படுத்துதல், மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுதல், பள்ளி வளாகத்தில் நீர் தேங்காவண்ணம் சுற்றுப்புறம் மேடு பள்ளம் இன்றி சமப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல், வகுப்பறைகளை சுத்தம் செய்து, நன்றாக நீரால் தூய்மை செய்து பள்ளியில் உள்ள கட்டடங்களையும், வளாகத்தையும் தூய்மையாக மிளிரச் செய்தல், பள்ளிகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக தூய்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இவாறு அவர் கூறினார்.
இதேபோன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
The post கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தூய்மைப் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.