வேலூர்: கோடை வெயிலால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் தரமற்ற ஐஸ்கிரீம்கள் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீமாகும். கோடைக்காலத்தில் சாலையோரமுள்ள கடைகள், ஓட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்கள் உள்பட பல இடங்களில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் அவர்களே சொந்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனங்கள் பல வகைகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக திருமணங்கள் உள்பட விசேஷ நிகழ்ச்சிகளில் ஐஸ்கிரீம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐஸ்கிரீம் இல்லாத விருந்தே இல்லை என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது.
மற்ற நாட்களை காட்டிலும் கோடையில் மார்ச் முதல் ஜூன் வரை நான்கு மாதங்களும் ஐஸ்கிரீம் விற்பனை வழக்கத்தை விட 50 சதவீதம் அதிகரிக்கும். கோடையில் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரிப்பை சாதகமாக்கிக்கொண்டு தரமற்ற ஐஸ்கிரீம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற தரமற்ற ஐஸ்கிரீம் சாப்பிடும்போது தொண்டை வலி, சளி, காய்ச்சல், ஒவ்வாமை போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் ஐஸ்கிரீம் விற்பனை களைகட்டியுள்ளது. இதுபோன்ற நேரங்களில் தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்கிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவில் ஐஸ்கிரீம் மூலப்பொருள்கள் தயாரிப்பு, காலாவதி தேதி போன்ற விபரங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சோதனை நடத்துவதோடு புகார்கள் வரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவருடைய உத்தரவையடுத்து ஐஸ்கிரீம் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அங்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தலின்படி ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். மேலும் சில கடைகளில் அவர்களே சொந்தமாக ஐஸ்கிரீம் தயாரித்து கோனில் நிரப்பி விற்பனை செய்கின்றனர். அதுபோன்ற ஐஸ்கிரீம் தரமாக உள்ளதா என்பது குறித்து மாதிரி எடுத்து சோதனை செய்யப்படும். அந்த சோதனையில் தரமற்ற ஐஸ்கிரீம் தயாரித்து விற்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து விற்பனைக்காக வெளியே அனுப்பும் பாக்கெட் ஐஸ்கிரீமும் ஆய்வுக்குட்படுத்தப்படும். அந்த ஆய்வில் ஐஸ்கிரீமில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகமாக ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனம் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதியில்லாமல் ஐஸ்கிரீம் தயாரிக்கக்கூடாது. அவ்வாறு தயாரிப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கோடை வெயிலால் விற்பனை அதிகரிப்பு; உடல் நலத்தை பாதிக்கும் தரமற்ற ஐஸ்கிரீம்கள்: ‘விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை’ appeared first on Dinakaran.