*மாவட்ட வன அலுவலர் தகவல்
மேட்டுப்பாளையம் : வனம் மற்றும் வன விலங்குகளின் முக்கியத்துவம், அவற்றின் அவசியம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மலையேற்றம் துவங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் மலையேற்றம் அனுமதிக்கப்பட்டது. அதில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் பர்லியாறு, போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வெள்ளியங்கிரி, சிறுவாணி, கோவை வனச்சரகத்தில் சேம்புக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மலையேற்றம் கடந்தாண்டு துவக்கப்பட்டது.
அந்த வகையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லாறு-பர்லியாறு இடையே 3.5 கிமீ தொலைவிற்கு மலையேற்றம் (டிரெக்கிங்) திட்டம் கடந்த நவ.2024ல் துவங்கியது. மேட்டுப்பாளையம் வனச்சரகம் 9780 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
இந்த வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள், மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன. இதனிடைய சமீபகாலமாக இளைஞர்கள், இளம்பெண்கள், பறவை ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் இடையே மலையேற்றம் விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.
மலையேற்றம் செல்ல விரும்பும் நபர்கள் https://www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து ஒரு நபருக்கு ரூ.949 மற்றும் 5% ஜிஎஸ்டி உடன் சேர்த்து சுமார் ரூ.1000 வரை பணம் கட்ட வேண்டும். தொடர்ந்து மலை ஏற்றம் வரும் நபர்களின் தொடர்பு எண்கள் அந்தந்த வனச்சரக அலுவலர்களுக்கு கிடைத்துவிடும்.
அந்த வகையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட மூன்று தினங்களில் காலை 9 மணி, 11 மணி என இரு முறை இந்த மலையேற்றம் அழைத்து செல்லப்பட்டு வந்தது. வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மலையேற்ற சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம்.
மலையேற்றம் செல்பவர்களுடன் கல்லாறு பழங்குடியினத்தை சேர்ந்த 4 ஆண்கள், 4 பெண்கள் என 8 பேர் மற்றும் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்டோர் அடங்கிய வனத்துறையை சேர்ந்த குழுவினர் அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வர்.
பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டியாகவும், பறவை காணுதல், முதலுதவி சிகிச்சை அளித்தல், உணவு தயாரித்து வழங்குதல் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதால் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லாறு வனச் சோதனைச்சாவடியில் துவங்கும் இந்த பயணம் மலையேற்றத்திற்கு வருவோருடன் துவங்குகிறது. பின், வாகனங்கள் மூலமாக பர்லியாறு வரை சென்று பின்னர் அங்கிருந்து கல்லாறு வரை வனப்பகுதிக்கு இடையே மலையேற்றம் செல்லலாம்.
மலையேற்றம் செல்லும்போது இதமான சூழல், பசுமை போர்த்தியதுபோல காணப்படும் வனப்பகுதிகள், ஜில்லென்ற நீர்வீழ்ச்சிகள், யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகளின் காலடித்தடங்கள், பல அரிய வகை பறவை இனங்கள், ரீங்காரமிடம் பூச்சிகள், வண்டுகள், வன விலங்குகளின் சப்தங்கள், வாய்ப்பு இருந்தால் வன விலங்குகளையும் நேரில் கண்டு மகிழலாம்.
இந்த அனுபவம் நிச்சயமாக ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும். மேலும், மலையேற்றம் செல்லும்பொழுது வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் அதற்கு ஏற்ப வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மலையேற்றம் செல்லும்பொழுதும், வரும்பொழுதும் பயணிகளுக்கு தேவையான தேநீர், ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த பல தினங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், வன விலங்குகளின் நடமாட்டமும், இடப்பெயர்ச்சியும் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்த மலையேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் மே மாதத்தில் மலையேற்றம் மீண்டும் துவங்கப்படலாம் என மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ‘‘கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவியது. இதன் காரணமாக மலையேற்ற நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் வரும் மே மாதத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் பர்லியாறு, வெள்ளியங்கிரி, சிறுவாணி, சேம்புக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மலையேற்றம் துவங்கப்படலாம். அதேபோல் மலையேற்றம் செல்லும் நபர்கள் இதயம் சம்பந்தமான நோய்கள், ரத்த அழுத்தம், சக்கரை உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்தால் மலையேற்றம் செல்வதை தவிர்க்கலாம்’’ என்றார்.
The post கோடை வெயிலின் தாக்கத்தால் தற்காலிகமாக நிறுத்தம் மே மாதத்தில் மலையேற்றம் மீண்டும் துவங்க வாய்ப்பு appeared first on Dinakaran.