* இந்த கோடை மழை சீசனை வேஸ்ட் பண்ணாதீங்க
* ஐடியா தருகிறார் ஓய்வு குடிநீர் வாரிய பொறியாளர்
விருதுநகர் : ‘நீரின்றி அமையாது உலகு’ ‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்’ என நீரின் இன்றியமையாமையையும், நீர் தருகின்ற மழையின் சிறப்பையும் தமிழ்ப்புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர். மாற்று என்பது இல்லாத காரணத்தால், தண்ணீரை தாய்க்கு ஒப்பாக கருதலாம். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்பது போல், தண்ணீரில் சிறந்ததொரு உயிர்க் காப்பும் இல்லை என கூறலாம்.
இத்தகைய நீருக்கு ஆதாரமான மழைத்துளியை, உயிர்த்துளி போல கண்ணும் கருத்துமாய் வீட்டிலே மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்கி, முறையாக சேகரித்து, குடிநீராகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வரும் மழைநீர் ஆர்வலர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 19 ஆண்டுகளாக வீட்டு மொட்டை மாடியில் கிடைக்கும் மழைநீரை பைப் மூலம் வீட்டின் முன்புறம் 12 அடி ஆழத்தில் தொட்டி அமைத்து, அதில் 15,000 லிட்டர் மழைநீரை சேமித்து குடிநீருக்கு, புழக்கத்திற்கு பயன்படுத்தி வருகிறார் விருதுநகர் லட்சுமி காலனியில் குடியிருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வுபெற்ற பொறியாளர் ரெங்கசாமி.
இந்த மழைநீர் சேகரிப்பு ரகசியம் குறித்து அவர் கூறியதாவது: குடிநீர் இல்லையென்றால் குடியிருப்பும் இல்லை. நீரில்லாத போதுதான் இன்னலும், இடம் பெயருதலும் நிகழ்கின்றன. தவிக்கிற மக்களுக்கு மிகவும் தேவையானது தண்ணீரே. அதனால் தான், 2006ல் வீடுகட்டும் போதே, மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளையும் அமைத்து விட்டேன்.
வீட்டின் மொட்டை மாடியில் 700 சதுர அடி பரப்பளவில் இடம் உள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர், கீழே உள்ள 12 அடி ஆழம் உள்ள தொட்டியில் வந்து சேரும். தொட்டிக்கு மேலே வடிகட்டும் ஜல்லடை வலை இருப்பதால், மழைநீருடன் தூசி, குப்பை வந்தாலும் வடிகட்டப்பட்டே, தரைமட்ட தொட்டிக்கு செல்லும்.
மழை ஓரளவு நன்றாக பெய்தால், 15,000 லிட்டர் உள்ள தரைமட்ட தொட்டி சில நாட்களிலே நிரம்பி விடும். இந்த மழைநீர் ஒரு மின்மோட்டார் மூலம், மாடியில் உள்ள தொட்டிக்கு கொண்டு செல்லப்படும். அந்த நீரைத் தான் குடிப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு என எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகின்றோம். மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.
அதனால், வீடு கட்டும் போதே மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து பைப் லைன் கொடுத்தால் போதும். மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தானாக தொட்டியில் சேரும். வீட்டில் மழைநீர் சேருவதால், கடுமையான வெயில் கொளுத்தினாலும் வீட்டுக்குள் குளிர்ச்சியாக இருக்கும். இன்றைய தாகத்திற்கும், நாளைய தண்ணீர் தேவைக்கும் மழைநீரை சேமித்தாலே போதும்.இவ்வாறு தெரிவித்தார்.
The post கோடை வெயில் கொளுத்தினாலும் வீடு குளிர்ச்சியாக இருக்கும் சின்ன மழை பெய்தாலும் போதும் 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரெடி appeared first on Dinakaran.