புதுடெல்லி: ராஜஸ்தானின் கோட்டா நகரில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து அம்மாநில அரசை கடுமையாக சாடியிருக்கும் உச்ச நீதிமன்றம், நிலைமை மிகவும் தீவிரமானது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், "அரசாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்தக் குழந்தைகள் கோட்டாவில் மட்டும் ஏன் இறக்கிறார்கள்? ஓர் அரசாக இதுபற்றி நீங்கள் யோசிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், "தற்கொலை வழக்குகளை ஆராய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.