எல்லாக் கட்சிகளிலும் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என காங்கிரஸ் தலைமை நினைத்துவிட்டது போலிருக்கிறது. அதனால், ஒரே சமயத்தில் கோவையில் மூன்று மாவட்டத் தலைவர்களுக்கும் மொத்தமாக விடை கொடுத்திருக்கிறது. காரணம் ஒன்றும் புதிதல்ல… வழக்கமான கோஷ்டி அரசியல் தான்.
தமிழகத்தில் காங்கிரஸ் கொஞ்சம் சத்தாக இருக்கும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என கோவை மாவட்ட காங்கிரஸ் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகர் மாவட்டத் தலைவராக வழக்கறிஞர் கருப்புசாமியும், வடக்கு மாவட்டத் தலைவராக வி.எம்.சி.மனோகரனும், தெற்கு மாவட்டத் தலைவராக என்.கே.பகவதியும் இருந்தனர். இவர்கள் மூவரையும் தான் அண்மையில் பொறுப்பிலிருந்து விடுவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.