சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளது என ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதற்கு திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், சென்னை IIT-யின் இயக்குநர் காமகோடி சாதாரண பாஜக காரர் பேசுவதைப் போல பேசக்கூடாது. கல்வியறிவு உடையவரைப் போல பேச வேண்டும். அவர், எவ்வித ஆதாரமுமின்றி மாட்டின் சிறுநீர் குறித்து பிற்போக்குத்தனமான, அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களை பரப்புவது, சமூகத்தை தவறாக வழிநடத்தும் செயல்.
பேசிய நிகழ்ச்சி தனியார் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கல்விசார் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பேசியவர் யாரென்பது தான் முக்கியம். அவர் வழிப்போக்கரல்ல, IIT இயக்குநர். IIT இயக்குநர் என்பதாலேயே அந்நிகழ்வில் அவர் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்வி சார்ந்த துறைகளில் செயல்படுபவர்கள் நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள், தரவுகள் அடிப்படையிலேயே பொதுவெளிகளில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.கோமியத்தில் மனிதனின் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய அபாயகரமான 14 வகையான பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதாக Indian Veterinary Research Institute-ன் ஆய்வு கூறுகிறது.
பல விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களின் எச்சில், சிறுநீரில் கூட சில ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதாக சில ஆய்வுகள் கூறினாலும், அவற்றில் தீங்கு விளைவிக்கக்கூடிய சில பாக்டீரியாக்களும், நச்சுக்களும் கூட நிறைந்திருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல நாடுகளில் அறிவியல் வளர்ச்சியடையும் முன்பு ஆடு, மாடு, யானை, ஒட்டகம், குதிரை, கழுதை போன்ற விலங்குகளின் சிறுநீரில் நோய் குணமாக்கும் ஆற்றல் இருப்பதாகக் நம்பப்பட்டு வந்துள்ளது. அது போன்று இந்திய துணைக்கண்டத்தில் ஆரியர்களின் ஆயுர்வேத மரபில் 8 வகை விலங்குகளின் சிறுநீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பசுவின் கழிவுகளுக்கு மத நம்பிக்கையின் அடிப்படையில் மிக முக்கிய இடம் தரப்பட்டுள்ளது. ஆனால், அறிவியல் ரீதியாக அவற்றில் உண்மையில்லை என நிரூபணம் ஆகும் போது மீண்டும் மீண்டும் அவற்றை சுமப்பது நாகரீகமல்ல. அறிஞர்களையும், வல்லுனர்களையும் உருவாக்கும் IIT போன்ற மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்புவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, இப்பேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ‘கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளது’.. ஐஐடி இயக்குநர் காமகோடி சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கேள்வி appeared first on Dinakaran.