புதுடெல்லி: பசு கோமியத்தில் மருத்துவப் பண்புகள் இருப்பதாக கூறிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு கடும் எதிர்வினையை சந்தித்துள்ளார். அவற்றுக்கு அவர் பதிலடியும் கொடுத்துள்ளார்.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, ‘‘கோமூத்திரத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது” என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தக் கருத்து அறிவியலுக்குப் புறம்பானது என்றும், மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே இவை உதவும் என்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, “கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று காமகோடி விளக்கமும் அளித்திருந்தார்.