ஓசூர்: ‘பிரதான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ என கிருஷ்ணகிரி மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். கல் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கற்களுக்கு கனமீட்டர் அடிப்படையில் அரசுக்கு பணம் செலுத்திய நிலையில், தற்போது மெட்ரிக் டன் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டும். புதிதாக கனிம நிலவரி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுகளை திரும்பப்பெறக் கோரி, தமிழகம் முழுவதும் கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனே ரிப்பள்ளியில் தமிழ்நாடு குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் சார்பில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது.