திருப்போரூர்: கோவளம் கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரையில் ஒதுங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை கடல் பரப்பில் வசிக்கும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் இனப்பெருக்க காலம். இதன் காரணமாக, இந்த மாதங்களில் கடலின் ஆழத்தில் வசிக்கும் ஆமைகள் முட்டைகளை இடுவதற்காக கடற்கரைக்கு வந்து குழி தோண்டி முட்டைகளை இட்டுவிட்டு கடலுக்கு திரும்புகின்றன.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இவ்வாறு கரைக்கு வரும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் படகுகளில் மோதியும், வலைகளில் சிக்கியும் உயிரிழப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கு, ஏற்றாற்போல் தினமும் கிழக்கு கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கடற்கரையில் ஒதுங்குகின்றன.இவற்றை பார்க்கும் பொதுமக்கள் அவையும் ஒரு மீன் வகைதான் என நினைத்து சாதாரணமாக கடந்து சென்று விடுகின்றனர். ஆனால், ஆமைகள் உயிர்ச்சூழல் சங்கிலியில் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றன என்பதை பலரும் உணர்வதில்லை. தமிழ்நாடு வனத்துறை சார்பில், இந்த ஆமைகளை இறப்பை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை முழுமையாக வெற்றி பெறவில்லை என்பது தற்போது நடைபெற்று வரும் அதிக அளவிலான ஆமைகள் இறப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இன்று, ஒரே நாளில் மட்டும் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், நெம்மேலி, பட்டிபுலம், மாமல்லபுரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் 100க்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இவற்றைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், கடல் ஆமைகள் பாதுகாப்பு குழுவினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உள்ளூர் மக்களின் உதவியுடன் அவற்றை கடற்கரை மணலில் புதைத்தனர். கடந்த சில வாரங்களில் மட்டும் தொடர்ச்சியாக முட்டையிட வரும் பெண் ஆமைகள் இறப்பது கடல் வாழ் உயிரின ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
The post கோவளம் கடற்கரை பகுதியில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லி ஆமைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.