கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் இன்று தேரோட்டம் நடந்தது. அமைச்சர்கள் சேகர்பாபு, கீதாஜீவன் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்தாண்டு பங்குனி பெருந்திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா வரும் 15ம்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9வது நாளான இன்று (13ம்தேதி) நடந்தது. இதையொட்டி காலை 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளல் நடந்தது. அதனைத்தொடர்ந்து காலை 9.00 மணிக்கு மேல் தேரோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று வடம்பிடித்து தேரினை இழுத்து தொடங்கி வைத்தனர். விழாவில் துரை வைகோ எம்பி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் இன்று பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.