இன்றைக்கு போக்குவரத்துக் கழகம் அரசுடமையாக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தனியார் கைகளில் இருந்தது. அன்றைக்கு மிகவும் பிரபலமாக இருந்த டிவிஎஸ், அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ், லயன், ஏவிஆர்எம், சந்திரா பேருந்துகள், மோட்டார் யூனியன் பேருந்துகள் போன்றவை எங்கள் பகுதியில் இயக்கப்பட்டன. குறிப்பாக டிவிஎஸ் பேருந்துகள் நேரம் தவறாமல் இயக்கப்பட்டதாகக் கூறுவார்கள். அந்தப் பேருந்து வருகையைக் கொண்டே நேரத்தை கணித்ததும் உண்டு.
பேருந்து வசதி இல்லாத காலத்தில், வசதி படைத்தவர்கள் வில் வண்டியில் பிரயாணம் மேற்கொள்வார்கள். கூண்டு கட்டப்பட்ட வில் வண்டியில் வைக்கோலை பரப்பி, அதன்மேல் ஜமுக்காளம் விரித்து அதில் அமர்ந்து செல்வார்கள். குடிப்பதற்கு திருகு செம்பில் தண்ணீர், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம் பொட்டலம், வடகம், மோர் மிளகாய், நார்த்தங்காய் ஊறுகாய் மற்றும் சீடை, முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்கள் சகிதமாகப் புறப்படுவார்கள்.