பொருளாதாரம் மிகுந்திருந்தால் இன்று எந்த நகரத்தாலும் சடுதியில் நவீனமயமாகிவிட முடியும். கோவை அப்படியான நகரம். அந்த நகரத்தின் நவீனம் முன்னேறிய நாடுகளின் நகரங்களுக்கு இணையாகக் கோவையை மாற்றியிருக்கிறது. உலகின் பெரு நகரங்களில் நிறைந்திருக்கும் நவீன அங்காடிகளும் விற்பனைக் கூடங்களும் (மால்கள்) திரையரங்குகளும் இன்று கோவையிலும் உள்ளன.
சொல்லப்போனால், மற்ற நகரங்களில் இல்லாத வசதிகளும் இன்று கோவையில் உள்ளன. ஆனால் கோவையின் சிறப்பு இந்த நவீனமய வளர்ச்சியில் இல்லை, அது நவீனமயத்தின் அசுர வளர்ச்சியை மீறித் தன்னுடைய பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதன் பாங்கில் உள்ளது. கோவையின் அந்தச் சிறப்புக்கு வலு சேர்க்கும் தெருக்களுள் ஒன்றே உப்புக் கிணறு தெரு.