கோவை: கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியதையடுத்து கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. ஒண்டிப்புதூர், பாரதியார் பல்கலை அருகே உள்ள இடம், கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு இடம், ஒண்டிப்புதூரில் திறந்த வெளி சிறைசாலை இடம் என நான்கு இடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டது.
இறுதியாக ஒண்டிப்புதூரில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் 20.72 ஏக்கர் இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதை தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து இறுதி செய்தார். இதன்பின் சிறைத்துறைக்கு சொந்தமான இடம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது. மைதானத்துக்கு தடையில்லா சான்று கேட்டு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மைதானத்தின் 3 கட்டிட மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்த வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் சமர்ப்பிக்கப்பட்டு, எந்த மாதிரியான வடிவமைப்பு என்பதை இறுதி செய்ய உள்ளார். இதற்கிடையே கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கியூஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலையம்: ஸ்டேடியம் வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்ய முடிவு appeared first on Dinakaran.