மதுரை: கோவை போலீஸ் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதாக தகவல் பரவிய நிலையில், ‘எந்த பிரச்னைக்கும் போகாமல் நான் திருந்தி வாழ்கிறேன்’ என்று மதுரையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார். மதுரையை சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். தற்போது திருந்தி வாழ்வதாக கூறும் அவர் தனது அடையாளமான கிலோ கணக்கில் நகை அணிந்து வலம் வருவதை மாற்றாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் வரிச்சியூர் செல்வம் கட்டப்பஞ்சாயத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் கோவைக்கு வந்திருப்பதாகவும், ஆயுதங்களுடன் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கி இருப்பதாகவும், அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் வரிச்சியூர் செல்வத்தை பிடிக்கவும், தேவைப்பட்டால் சுட்டுப்பிடிக்கவும் போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் மாநகர போலீசார் செல்வபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் தங்கும் விடுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடியவிடிய துப்பாக்கியுடன் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவையில் வரிச்சியூர் செல்வம் பதுங்கி இருப்பதாக பரவிய தகவல் வதந்தி. நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டது உண்மைதான். ஆனால் அதற்கும், வரிச்சியூர் செல்வம் கோவையில் பதுங்கி இருப்பதாக பரவிய தகவலுக்கும் தொடர்பு இல்லை. வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகரில் துணை கமிஷனர் தலைமையிலான குழுவும், மாவட்டத்தில் எஸ்பி தலைமையிலான குழுவும் ஓட்டல், விடுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறது. அதற்காகவே போலீசார் நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் சோதனை செய்தனர் என தெரிவித்தார்.
இந்நிலையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் இருந்து எங்கே போனாலும் போலீசுக்கு சொல்லி விட்டுத்தான் போகிறேன். சிபிசிஐடி போலீஸ்காரருக்கு எங்கே போனாலும் சொல்லி விடுவேன். மதுரையை விட்டு வெளியில் போனால் லொகேஷன் அனுப்புவேன். போலீசுக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக இருக்கிறேன். நான் திருந்தி வாழ்கிறேன். எந்த பிரச்னைக்கும் நான் செல்வதில்லை.என் பேரன், பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்.
நான் கோவை சென்று 13 வருடம் ஆகிறது. சுட்டு பிடிக்கவேண்டும் என்று வந்த செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தவறு செய்திருந்தால் ஓகே. எதுவும் செய்யாத நிலையில் இப்படி செய்தி வந்தது ஏன் என தெரியவில்லை. போலீசார் பெயர் வாங்குவதற்காக என்கவுன்டர் செய்கிறார்கள் என்பது தவறான கருத்து. சேட்டை பண்ணினால் என்கவுன்டரில் சுடத்தான் செய்வார்கள். ஏதாவது தப்பு செய்தால் சுடாமல் என்ன செய்வார்கள்? ரவுடியிசத்தை விட்டு ஒதுங்கி விட்டால் போலீசார் விட்டு விடுவார்கள்.
போலீசார் நடத்தும் என்கவுன்டர்களை ஆதரித்துத்தான் ஆகவேண்டும். 10 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீசார் தான் உள்ளனர். ரவுடிகள் செய்யும் சேட்டைக்கு என்ன செய்ய முடியும்? நல்லவர்களை சுட்டால் போலீசை குறை சொல்லலாம். ஆனால் ரவுடி பயல்கள், திருட்டு பயல்கள், காவாலி பயல்களைத்தான் போலீசார் சுடுகிறார்கள். நானெல்லாம் திருந்தி, எந்த பிரச்னையும் வேண்டாம் என்று இருக்கிறேன். கோவையில் இருந்து எந்த போலீசாரும் என்னிடம் பேசவில்லை.
இரண்டு கொலை வழக்குகள்; மற்றவை அடிதடி வழக்குகள் என என் மீது 7 வழக்குகளே இருக்கிறது. எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை. நமக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நாம் எப்போதும் ஜாலி மேன்தான். ரவுடியாக இருப்பது கெத்து என நினைத்து ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தால், கை, கால் உடைந்துதான் கிடக்க வேண்டும். காவல் நிலையத்தில் உட்காரும் போது தான் தெரியும். ஜட்டியுடன் உட்கார வைத்து விடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கோவையில் துப்பாக்கியுடன் விடியவிடிய சோதனை சுட்டுபிடிக்க போலீஸ் உத்தரவா? ரவுடி வரிச்சியூர் செல்வம் அலறல்: ‘நான் எந்த வம்புக்கும் போகாம நல்ல பிள்ளையா இருக்கேங்க…’ appeared first on Dinakaran.