சென்னை: தமிழ்நாடு தொடர்புடைய மருத்துவத் துறையின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லியில் வழங்கினார். அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அமைச்சரிடம் வழங்கினோம். குறிப்பாக தமிழகத்தில் ஏற்கனவே 36 மருத்துவ கல்லூரிகள் உள்ளது.
இன்னும் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக தலா 50 இடங்களை ஒதுக்க கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 150 மருத்துவ கல்லூரி இடங்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 24 நகர்ப்புற மற்றும் 26 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 500 துணை சுகாதார நிலையங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டத்தில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டில் புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கு ரூ.447.94 கோடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 603.45 கோடி மதிப்பீட்டில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தி திறன் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும், கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு. ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் நடைமுறைக்கு எதிரான சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை appeared first on Dinakaran.