ஒரு காலத்தில் கோவையில் வானதி சீனிவாசன் மட்டுமே பாஜக-வின் அதிகார மையமாக இருந்தார். ஆனால், மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து அண்ணாமலை தனது அரசியல் செயல்பாடுகளை கோவைக்கு மாற்றியதும் மையம் இரண்டானது. கோவை பாஜக-வில் அண்ணாமலை பாஜக, வானதி பாஜக என இரண்டு கோஷ்டிகள் ஆவர்த்தனம் செய்தன. இதனால் சில சங்கடங்களும் ஏற்பட்ட நிலையில், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வானதியும், அண்ணாமலையும் சாதுர்யமாக அரசியல் செய்தனர். இப்போது அண்ணாமலை மாற்றப்பட்டுவிட்டதால் மீண்டும் ஒன்மேன் ஆர்மியாகி இருக்கிறார் வானதி. பழையபடி கோவை பாஜக அவரைச் சுற்றியே நகர்கிறது.
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து பாஜக தலைமையின் கூடுதல் அபிமானத்தைப் பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு தனது செயல்பாடுகளை இன்னும் வேகப்படுத்திய வானதி, சட்டமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதிலும் கருத்துகளை பதிவு செய்வதிலும் திமுக-வுக்கு சிம்மசொப்பனமானார்.