கோவை: தொழில் நகரான கோவையில் திரைப்பட தொழில் வணிகம் கோலோச்சி வந்த நிலை மாறி கால ஓட்டத்தில் நூற்றாண்டு, பொன் விழா கண்ட திரையரங்குகள் அண்மைக் காலங்களில் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னையைத் தாண்டி சேலத்தில் 1935-ல் டி.ஆர்.சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவைத் தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக 1937-ல் ரங்கசாமி நாயுடு, ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார், இயக்குநர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரின் முயற்சியில் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. தொடர்ந்து 1946-ல் புலியகுளத்தில் பட்சிராஜா ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய இருவரின் திரை வாழ்க்கையில் சென்ட்ரல் ஸ்டுடியோ, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகியவை முக்கியப் பங்கு வகித்தன.