கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தல் தொடர்பாக விளக்கம் கேட்டு கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருவதற்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத்துறை சார்ந்த நிறுவனத்தினர் செலுத்தி வரும் வரியினங்கள் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி என இருபிரிவுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தொழில்துறையினர் கூறி வரும் நிலையில் சமீப காலமாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.