பூந்தமல்லி: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக இதுவரை முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது வெவ்வேறு காலகட்டங்களில் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில், ஷேக் ஹிதாயத்துல்லா, உமர் பாரூக், பவாஸ் ரஹ்மான், ஷரன் மாரியப்பன் மற்றும் அபூ ஹனிபா ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நான்காவது துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவர்கள் பயங்கரவாத நிதியுதவி, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 5 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.