சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலையில் அதே பகுதிகளில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மேலும் வலுப்பெறும். இது தவிர மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27ம் தேதி உருவாகும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட சூழ்நிலைகளின் காரணமாக தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை நேற்று பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் இன்று பெய்யும். மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்யும். 25 மற்றும் 26ம் தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். திருப்பூர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
இதற்கிடையே, இன்று முதல் 27ம் தேதி வரையில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் இயல்பைவிடக் குறைவாகவும் இருக்கும்.
மேலும், இன்று முதல் 27ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். வங்கக் கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதே நிலை 26ம் தேதி வரையும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி சற்று தெற்கு நோக்கி நகர்ந்து மும்பை-கோவா இடையே தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மும்பையில் பலத்த மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. ஒட்டுமொத்த அரபிக் கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து முறைப்படியான அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவிக்க இருக்கிறது.
The post கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் appeared first on Dinakaran.