சென்னை : ஆப்ரேசன் கஞ்சா 2.0 மூலம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி, செயின் பறிப்பு உள்ள்ளிட்ட நடவடிக்கைகளை ஈடுபடுவதாக அதிர்ச்சி சம்பவங்களும் அதிகரித்தது.
இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதோடு மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தமிழக போலீசாருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை போதை பொருள் விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற பெயரில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தொடர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
கஞ்சா விற்பனை
குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். மேலும், கடத்தல், பதுக்கல், விற்பனை ஆகிய சங்கிலி தொடரை உடைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், போதை பொருள் விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ரயில்வே போலீசாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கைப்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
போலீசாருக்கு அறிவுறுத்தல்
போலீசாருக்கு அறிவுறுத்தல்
மேலும், போதை பொருள் விற்பவர்கள், பின்னணியில் இருப்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பை, காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறிய டிஜிபி, கண்காணிப்பு பணிகளை, மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
கஞ்சா பறிமுதல்
இதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை கட்டுப்படுத்தப்படுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 6-ம் தேதி வரை கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 8929 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.