ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் அபிஷேக் சர்மா 11 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். நித்திஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் ஹென்ரிச் கிளாசன் 14 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் விளாசினர். ராஜஸ்தான் அணி தரப்பில் பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 3, மஹீஷ் தீக்சனா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.