சென்னை: “சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அண்ணா பல்கலை. விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டனர். அண்ணா பல்கலை. வேந்தராக ஆளுநர் இருப்பதால், அவருக்கு எதிராக இந்த போராட்டம் செய்தார்களா? என்று எனக்கு தெரியவில்லை. அதுகுறித்து அவர்கள் யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை” என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (ஜன.6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும். நாளை (ஜன.7) மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஜன.8-ம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, விவாதம் நடைபெறும். ஜன.9 மற்றும் ஜன.10-ம் தேதிகளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். ஜன.11-ம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலுரை, அரசின் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல், அரசின் பிற அலுவல்கள் குறித்து விவாதிக்கப்படும்.” என்றார்.