வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் அத்தனை பேரையும் நாடு கடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறி சட்டவிரோத செயல்களை ஈடுபட்டவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வருகிறது. அந்த வகையில், கொலம்பியாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள், 2 அமெரிக்க போர் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் கொலம்பியா சென்ற அந்த அமெரிக்க போர் விமானங்களை கொலம்பியா திருப்பி அனுப்பியது.
தங்கள் நாட்டவர்களை ஏற்றி வந்த அமெரிக்க விமானங்கள் கொலம்பியா வான்வெளிக்கும் நுழைய அந்நாட்டு அதிபர் கஸ்டாவோ பெட்ரோ அனுமதி மறுத்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், உடனடியாக கொலம்பியா மீது 25 சதவீத வரி விதிக்க உத்தரவிட்டார். கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்க வேண்டுமெனவும், அடுத்த வாரத்தில் இருந்து இந்த வரி 50 சதவீதமாக உயர்த்தவும் டிரம்ப் உத்தரவிட்டார்.
அதுமட்டுமின்றி, கொலம்பியா அரசுக்கு ஆதரவான அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அமெரிக்க விசா வழங்க தடை விதித்தும், கொலம்பியாவிலிருந்து தனிநபர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் தீவிரமாக ஆய்வு செய்யவும் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகள் வெறும் ஆரம்பம் தான் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனால் கொலம்பியா அதிபர் பெட்ரோ வேறுவழியின்றி டிரம்ப் மிரட்டலுக்கு பணிந்தார். டிரம்ப் உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார்.
தனது நாட்டு மக்களை கண்ணியமாக திரும்பப் பெற, அமெரிக்காவுக்கு விமானத்தை அனுப்பி வைப்பதாக அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, கொலம்பியா மீது விதிக்கப்பட்ட உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலினா லீவிட் நேற்று தெரிவித்தார். கொலம்பியா குடியேறிகளை அமெரிக்கா குற்றவாளிகளாக கருத முடியாது என்றும், அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதித்தும் முதலில் பதிலடி கொடுத்த கொலம்பியா அதிபர் பெட்ரோ, பின்னர் டிரம்புக்கு பணிந்தது குறிப்பிடத்தக்கது. இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* குருத்வாராக்களில் அதிரடி சோதனை
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள குருத்வாராக்களில் அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு சட்டவிரோத குடியேறிகள் வந்து செல்கிறார்களா என்பதைப் பற்றி விசாரித்து ஆய்வு செய்கின்றனர். இது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோத குடியேறிகளாக இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
* வெளிநாட்டு நிதி நிறுத்தம் மறுஆய்வு
அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்துமாறு நிர்வாக உத்தரவில் கையெழுதிட்டார். இது ஆப்ரிக்க நாடுகள், எச்ஐவி உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த செயல்படும் அமைப்புகள் கவலை அடைந்தன.
இந்நிலையில், இந்த உத்தரவு மறுஆய்வு செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டம்மி புரூஸ் நேற்று தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களின் வரிப்பணம் மூலம் வழங்கப்படும் இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா, அமெரிக்க மக்களுக்கு நலன் செய்யும் வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை நிதி நிறுத்தி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
The post சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்ததால் கொலம்பியா மீது 25% வரி, விசா தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்; உலக நாடுகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.