பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நாடெங்கும் முக்கிய நகரங்களில் பிரமாண்ட பேரணிகளை நடத்தினர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் அரசு தோற்று பதவி விலகியது. இதன் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது என இம்ரான் கான் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார். பாகிஸ்தானில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் இம்ரான் கானின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்தனர். லாகூர், முல்தான், கராச்சி, ஃபைசலாபாத் உள்ளிட்ட நகரங்களில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய இம்ரான் கான் ஆதரவாளர்களின் பேரணி இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது.
இறக்குமதி அரசாங்கம் எங்களுக்கு தேவையில்லை என்று எழுதப்பட்ட பதாகைளை போராட்டக்காரர்கள் கையில் வைத்திருந்தனர். லாகூரில் நடந்த பேரணியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த இம்ரான் கான், இது போன்ற கூட்டத்தை பாகிஸ்தான் கண்டதில்லை என தெரிவித்திருந்தார். சதிகாரர்கள் அமைக்கப்போகும் ஆட்சியை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பதை தாமாக திரண்டு வந்த இந்த கூட்டம் நிரூபிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.