சத்தியமங்கலம் : தமிழகத்தில் சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை, மேகமலை, ஆனைமலை மற்றும் முதுமலை என 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன.இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். 4 புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் புலி,சிறுத்தை,யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன.
மேற்கே சீகூர் வனப்பகுதியும் வடக்கே கர்நாடக மாநில வனப்பகுதியும், கிழக்கே ஈரோடு வன மண்டல வனப்பகுதி என காப்பகத்தின் 3 திசைகளிலும் வனப்பகுதியை இணைப்பதால் வெளிமாநில வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளும் இங்கு வந்து செல்கின்றன. மேலும் தாளவாடி, திம்பம், கடம்பூர் பகுதியில் மலைகளை உள்ளடக்கியதாகவும்,தெங்குமரஹாடா வனப்பகுதியில் மாயாறு ஓடுவதால் மழை பெய்யும் காலங்களில் இந்த வனம் பச்சைப்பசேலென கம்பளம் விரித்தது போல் இருப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இவ்வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அறிந்து வனஉயிரின சரணாலயமாக இருந்த இவ்வனப்பகுதியை கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புலிகள் காப்பகத்திற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு பயணிகளை அழைத்துச்செல்வதற்காக வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து காலை மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அழைத்துச் செல்லும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த சுற்றுலா திட்டம் ஓராண்டு மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் தங்கி காலை நேரத்தில் வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லும் வகையில் மாயா வன சுற்றுலா திட்டம் கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான விடுதிகளில் தங்க அதிகப்படியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் இத்திட்டமும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. இதற்கிடையே வன சுற்றுலா திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தற்போது பயன்பாடின்றி வனத்துறை அலுவலக வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மீண்டும் வன சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏற்கனவே சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டபோது திட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் சுற்றுலா திட்டம் தோல்வியடைந்தது.
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ளது போல் இங்கு சுற்றுலா திட்டத்தை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அடர்ந்த வனப் பகுதியில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று யானை,புலி,சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை பார்க்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே வன சுற்றுலா திட்டம் வெற்றியடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம், மாயா வன சுற்றுலா திட்டம் என இரண்டு திட்டங்கள் இருந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் 2 திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் மற்ற வனப்பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளதால் இங்கு மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் புதிய வன சுற்றுலா திட்டத்திற்கு அனுமதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய வன சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனில் திட்டத்திற்கு தேவையான நிதி மற்றும் அதற்கென தனியாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். இரண்டொரு மாதங்களில் வனத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதால் விரைவில் புதிய வன சுற்றுலா திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன சுற்றுலா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.