வாக்காளர் பட்டியிலில் இறந்தவர் பெயரை நீக்குதல், ஒருவது பெயரே 2 முறை இடம் பெறுவது போன்ற தவறுகள் இல்லாமல், 100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், "அரசியல் கட்சிகளிடம் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைப் பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாக்காளர் பட்டியல் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று தலைமைச் செயலகத்தில், ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் என 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.