சவுதி அரேபியா என்றவுடன் அதன் எண்ணெய் வளமும், மெக்கா, மதினா போன்ற புனிதத் தலங்களால் அதற்குள்ள மத ரீதியிலான கலாச்சார பின்புலமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், சவுதி அரேபியா சமீப காலமாக சர்வதேச மத்தியஸ்தத்தின் அடையாளமாக மாறிவருகிறது. அவ்வாறாக, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஆழமான, தெளிவான கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது.
மத்திய ஆசியாவின், மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதியை விரும்பும் சவுதி அரேபியா அப்பகுதிகளில் மட்டுமல்லாது உக்ரைன் – ரஷ்யா அமைதி வரை தனது மத்தியஸ்த செயல்பாடுகளை நீட்டி வருவதற்கான பின்புலத்தைத் தேடியபோது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கப் பெற்றன. ஒரு சின்ன, ஆனால் கவனிக்கத்தக்க வரலாற்றுப் பின்புலமும், மாற்றத்துக்கு வித்திட விரும்பும் ஓர் இளம் அரச வாரிசும், இங்கே பேசப்பட வேண்டியவையாக இருக்கின்றன. கூடவே, திரைமறைவில் இருந்து காய் நகர்த்தும் அமெரிக்கா பற்றியும் பேச வேண்டும்.