மதுரை: மதுரை ரயில் நிலையம் தரம் மேம்படுத்தும் பணிகள் ரூ.347 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. மீத பணிகளை வேகமாக முடித்து அடுத்த 2026 மார்ச் மாதத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் நகரமான மதுரைக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
மதுரையின் போக்குவரத்து வசதிகளில் ரயில் சேவை முக்கியமானதாக உள்ளது. இதனால், தெற்கு ரயில்வேயில் மிகவும் பிசியான ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்றாக மதுரை விளங்குகிறது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவது வந்து செல்வது என, இங்குள்ள தண்டவாளங்களில் தினந்தோறும் பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை 100ம் அதிகமாக இருக்கிறது. இதனால் நாள்தோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
இதனால் இந்த ரயில் நிலையத்தை உலக தரத்தில் உயர்த்த வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை கவரும் வகையில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.347 கோடி திட்ட மதிப்புடன் பணிகள் துவங்கப்பட்டு, 36 மாதங்களில் முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு விரைவாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் 50 சதவீத பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி மதுரை ரயில் நிலையத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்கள் வழியாக பயணியர் வந்து செல்லும் வகையில் இரண்டு முனையம் அமைக்கப்படுகிறது. இதனுடன் மூன்றடுக்கு வாகன நிறுத்தம், அருகில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் செல்வதற்கான சுரங்க நடைபாதை, மேம்படுத்தப்பட்ட டிக்கெட் கவுண்டர்கள், ரயில்வே அலுவலர்கள் தங்குமிடம், பயணியருகான நவீன ஓய்வறைகள் மற்றும் தங்குமிடங்கள், பார்சல்களை கையாளும் நவீன வசதிகள் கொண்ட மையம் உள்ளிட்டவற்றுடன் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடர்கிறது.
இதேபோல் முதல் தளத்தில் பயணிகள் அமரும் அறை, ரெஸ்டாரண்டுகள், சிறிய கடைகள் உள்ளிட்டவை உருவாகிறது. இரண்டாவது தளம் என்பது முழுமையாக வணிகம் சார்ந்த பகுதியாக அமைகிறது. அதேபோல் மேற்கு நுழைவாயிலில் டிக்கெட் கவுண்டர்கள், ரயில்வே அலுவலகங்கள் என மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. ரயில் நிலைத்தில் கார் பார்க்கிங் என்பது கிழக்கு பகுதியில் 9430 சதுர மீட்டர் பரப்பிலும், மேற்கு பகுதியில் 2580 சதுர மீட்டரிலும் உருவாகிறது. இதேபோல் கிழக்கில் 2822 சதுர மீட்டரில் பன்னடுக்கு டூவீலர் பார்க்கிங் அமையவுள்ளது.
இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளில் சில கட்டிடங்கள் 100 சதவீதம் முடிவுக்கு வந்துள்ளது. சில பகுதிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனர்.
* கோபுரம் வடிவில் நுழைவாயில்…
ரயில் நிலையத்தில் கிழக்கு முனையம், 22 ஆயிரத்து 576 சதுர மீட்டரில் மதுரையின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. மதுரையின் பெருமைகளுள் ஒன்றான மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரம் வடிவில் கிழக்கு முனையம் அமைய உள்ளது. அடித்தளத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்படும் இடங்கள் தனியாக அமைக்கப்படுகிறது. அதே போல் கீழ் தளத்தில் கழிப்பறை வசதி, நேர காப்பாளரின் அறை, குழந்தைகள் பாதுகாப்பு அறை, உதவி மையம், கடைகள் அமையவுள்ளது.
The post சர்வதேச தரத்தில் கட்டமைப்பு பணிகள் மதுரை ரயில் நிலையம் ரூ.347கோடியில் சீரமைப்பு: 50 சதவீத பணிகள் நிறைவு, 2026ல் முடிவுக்கு வருகிறது appeared first on Dinakaran.