சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 24) காலை சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்தை அடுத்து அவரது தயார் கமலா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
அதன் விவரம்: சென்னை – கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வசித்து வரும் ஆச்சிமுத்துவின் மனைவியான கமலா (68) என்பவர் இன்று காலை தன் வீட்டில் சுமார் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் நுழைந்து, தன்னை அவதூறாக பேசியதோடு, கழிவு நீரை வீசி வீட்டை மாசுபடுத்தி, தனக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் மனுவாக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.