ரியாத்: சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய பகுதிகளில் வீசிய கடுமையான புழுதி புயலால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஜோர்டானில் புழுதி புயலோடு பெய்த ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாயும், மகனும் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் மத்திய பகுதியில் உள்ள மாகாணத்தில் சுமார் 2,000 மீட்டர் உயரத்திற்கு சுவர் போல் எழுந்த பிரமாண்ட புழுதி புயலால் நகரங்கள் புழுதிமயமாகின. வானுக்கும் மண்ணுக்கும் இடையில் எழுப்பப்பட்ட சுவர் போல நகர்ந்த புழுதி புயலின் தாக்கத்தால் வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புழுதி புயலின் தாக்கத்தில் பார்வை மங்கியதால் அனைத்துவிதமான போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளானது. ரியாக் உள்ளிட்ட 5 நகரங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ள வானிலை மையம் மக்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
குவைத்திலும் புழுதி புயலின் தாக்கம் வெகுவாக இருந்தது. 100 கி.மீ. வேகத்தில் புழுதி புயல் வீசியதால் போக்குவரத்து முடங்கியது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஜோர்டானில் புழுதி புயலோடு ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய அகழ்வாராய்ச்சி இடமான பெட்ராவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த சுமார் 1800 பேர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஜோர்டானில் பெரும் மழை வெள்ளப்பெருக்கில் சிக்கி பெல்ஜியத்தில் இருந்து சுற்றுலா வந்த தாயும், மகனும் உயிரிழந்தனர்.
The post சவுதி அரேபியாவில் வானுக்கும் மண்ணுக்கும் எழுந்த புழுதிப்புயல்: அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் பாதிப்பு appeared first on Dinakaran.