கோபால்பட்டி : சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.சாணார்பட்டி அருகேயுள்ள வேம்பார்பட்டி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வந்தன. இவைகள் அவ்வப்போது வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. கடந்த வாரம் சாலையில் நடந்து சென்ற 1ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை ஒரு குரங்கு கடித்து குதறியது. இதையடுத்து அட்டகாசம் செய்யும் அந்த குரங்குகளை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி சிறுமலை வனச்சரகர் மதிவாணன் உத்தரவின் பேரில் வனவர் பாண்டி, வனக்காப்பாளர் காமேஸ் ஆகியோர் நேற்று காலை வேம்பார்பட்டிக்கு வந்து குரங்குகளை பிடிக்க கூண்டுகளை அமைத்தனர். பின்னர் கூண்டிற்குள் குரங்குகளுக்கு பிடித்தமான நிலக்கடலை, பொட்டு கடலை, வாழைப்பழம், தேங்காய் பன் ஆகிய தின்பண்டங்களை பொறியாக வைத்து காத்திருந்தனர்.
சிறிதுநேரம் கழித்து அப்பகுதியில் சுற்றி திரிந்த குரங்குகள் ஒவ்வொன்றாக தின்பண்டங்களுக்கு ஆசைப்பட்டு கூண்டுக்குள் வரிசையாக நுழைந்து அதனை சாப்பிட துவங்கின. இதையடுத்து சிறிதுநேரம் காத்திருந்த வனத்துறையினர் கூண்டின் கதவை லாவகமாக மூடினர். இதில் மொத்தம் 25 குரங்குகள் சிக்கி கொண்டது. பிடிபட்ட இந்த குரங்குகள் வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post சாணார்பட்டி வேம்பார்பட்டியில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு appeared first on Dinakaran.