மதுரை: வங்கியில் பெரும் தொகையை கடன் பெற்று, செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக சாதாரண மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த எழின்மஞ்சு ப்ரீத்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தேசிய வங்கியில் கடந்த 2013ல் வீட்டுக்கடனாக ரூ.50 லட்சம் பெற்றேன். இதற்கு எனது தந்தை உத்தரவாதம் அளித்திருந்தார். நான் தவணை தொகையாக ரூ.59,53,140 செலுத்தியுள்ளேன். நிலுவைத் தொகை ரூ.41,44,113 ஆக இருந்தது.
இந்நிலையில், வங்கியில் இருந்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் எனது கணக்கு ‘செயல்படாத சொத்து’ என அறிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு உரிய விளக்கம் அளித்தேன். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் எனது சொத்து மீது உரிமை கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை எனது சொத்தின் மீது உரிமை கோருவது தொடர்பாக, வங்கி தரப்பில் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். நோட்டீசை சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், ‘‘வங்கியில் பெரும் தொகையை கடன் பெற்று, செலுத்தாதவர்கள் மீது வங்கி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சாதாரண மக்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இது துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கில் மனுதாரரின் சொத்தின் மீது உரிமை கோரி வங்கியால் அனுப்பப்பட்ட நோட்டீசிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வங்கியின் திருச்சி ராமலிங்க நகர் கிளையின் மேலாளர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post சாதாரண மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வங்கிகள் பெருங்கடன் பெற்று செலுத்தாதவர் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.