சென்னை: சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயரை தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்து பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இசை வேளாளர் சாதி சான்றிதழ்களை இசை வெள்ளாளர் என தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன் மகளுக்கு சாதி சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் என குறிப்பிட்டு சாதி சான்று வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கான பட்டியலில் இருக்கும் இசை வேளாளர் பெயரை, இசை வெள்ளாளர் என மாற்றி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக தொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான ஆணையத்திடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி, இது தொடர்பான தமிழக அரசின் அரசாணையில் இசை வேளாளர் என்பதை ஆங்கிலத்தில் isaivellalar இசை வெள்ளாளர் என இருப்பதால் அதனடிப்படையில் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்குவதாக குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதிகள் இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் பாதிப்பில்லை என்றாலும், ஒரு நபரின் சமூகத்தை குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும், சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்க கூடாது என வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் எழுத்து பிழைகள் இல்லாமல் ஒரே மாதிரியான பெயரில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
The post சாதி பெயரை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுத்து பிழைகள் ஏதும் இல்லாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.