திருவண்ணாமலை: கனமழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் இன்று (டிச.12) திறந்து விடப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தாக்குதலை தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.12) அதிகாலையில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் முக்கிய அணையான சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 117.50 அடியாக இருந்தது. அணைக்கு வந்த, விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீரும், தென் பெண்ணையாற்றில் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அணையில் 6,986 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைப் பகுதியில் 18.2 மி.மீ. மழை பெய்தது.