சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் பதநீர் சீசன் தொடங்கியுள்ளது. ஒரு கலயம் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி, பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்டவை மருத்துவ குணங்கள் கொண்டவையாக விளங்கி வருகிறது. பதநீர், பனம்பழம் தவிர மற்ற பொருட்கள் ஆண்டுதோறும் கிடைக்கும் வகையில் உள்ளது. பதநீர் சீசன் தொடங்கி சுமார் ஆறு மாதங்கள் வரை கிடைக்கும். பதநீர் சீசன் தொடங்கியதும் பனைத் தொழிலாளர்கள் காலை, மாலை பதநீர் இறக்கும் பணியில் ஈடுபடுவர். சிலர் குடும்பமாக பனை மரங்கள் சூழ்ந்திருக்கும் தோட்டத்தில் தங்கி இருந்து இப்பணியில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.
தற்போது பனை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் பதநீர் சீசன் காலங்களில் வெளியூர் பகுதியில் இருந்து பனை ஏறும் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு பதநீர் இறக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் தற்போது பதநீர் சீசன் தற்போது துவங்கி உள்ளது. பனையேறும் தொழிலாளிகள் பனை மரங்களில் ஏறி பதநீரை இறக்கி வருகின்றனர். ஒரு கலயம் பதநீர் (அதாவது 2 லிட்டர் பதநீர்) ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பதநீர் ரூ.100க்கு விற்பனை ஆகிறது. இதில் மீதமாகும் பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக மதிப்பு கூட்டி பனை தொழிலாளிகள் விற்பனை செய்து வருகின்றனர். புதுக்குளம் ஞானியார் குடியிருப்பு பகுதியில் சாலையோரங்களில் அதற்கான குடில்கள் அமைத்து பஸ் மற்றும் வாகனங்களில் வருபவர்களிடம் பதநீரை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சாத்தான்குளம் பகுதியில் பதநீர் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.
ரேசன் கடைகளில் கருப்பட்டி விற்பனை:
இதுகுறித்து பனைத் தொழிலாளி சங்கரன் குடியிருப்பு ரகு கூறுகையில், ‘நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பனைத் தொழிலாளியாக இருந்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். பனை சீசன் காலங்களில் ஓரளவு குடும்பத்தை சமாளித்து கொண்டு சென்று வருகிறேன். மற்ற நாட்களில் மிகுந்த சிரமம் தான். ஆதலால் பனை நல வாரியம் மூலம் பனைத் தொழிலாளர்களுக்கு பணி இல்லாத ஆறு மாத காலத்திற்கு மீனவர்களுக்கு வழங்குவது போல் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
பனையில் இருந்து கிடைக்கும் மூலப் பொருட்களான கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கிழங்கு உள்ளிட்ட பொருட்களை சந்தைபடுத்திட எளிய வழிமுறைகளை கொண்டு வர வேண்டும். தமிழக அரசின் நியாய விலை கடைகளில் சீனி விற்கப்படுவது போல் கருப்பட்டியும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
கள் விற்பனைக்கு அனுமதி கிடைக்குமா?:
பதநீர் சீசன் தொடங்கியதும் பதநீர் கள் எனப்படும் கள் விற்பனையும் சூடு பிடிக்கும். கள் விற்பனை செய்யப்படுவது தமிழக அரசு தடை செய்துள்ளது. எனவே பல இடங்களில் அனுமதிக்காமல், சில இடங்களில் ரகசியமாக நடக்கிறது. ஆதலால் தமிழக அரசு மருத்துவ பரிசோதனையுடன் கள் விற்பனையை தமிழகத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பனைத் தொழிலாளர்கள் மற்றும் மது பிரியர்கள் விரும்புகின்றனர்.
The post சாத்தான்குளம் பகுதியில் களைகட்ட தொடங்கியது பதநீர் விற்பனை: ஒரு கலயம் விலை ரூ.150 appeared first on Dinakaran.