போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி பகுதியில் சாமந்தி விலை சரிந்து வருவதால், விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால், காய்கறி மற்றும் பல்வேறு மலர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பேருதவியாக மலர் சாகுபடி உள்ளது.
கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாமந்தி சாகுபடி செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையின் போது ஒரு கிலோ சாமந்தி ரூ.150 முதல் ரூ.300 வரை விற்பனையானது.
பொங்கல் முடிந்ததும் விலை சரியத் தொடங்கியது. தற்போது, தரத்திற்கேற்ப கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஒரு கிலோ சாமந்தி ரூ.50க்கு விற்பனையானால் கூட போதும். அசல் கிடைத்து விடும் என்ற நிலையில் உள்ளோம். ஆனால், பறிப்பு கூலிக்கு கூட விலை கிடைக்காததால், பூக்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுள்ளோம்.
நிலையில்லாத விலையால் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், மாற்று தொழில் செய்ய முடிவு செய்துள்ளனர். இதே நிலை நீடித்தால் அனைத்து விவசாயிகளும் சாமந்தி சாகுபடியை கைவிடும் நிலை உருவாகும்,’ என்றனர்.
The post சாமந்திக்கு நிலையில்லாத விலையால் மாற்று பயிர் சாகுபடிக்கு ஆயத்தமாகும் விவசாயிகள் appeared first on Dinakaran.