சென்னை: சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்ததாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த அக்டோபர் 14ம் தேதி வழக்கம் போல சாம்சங் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். பின்னர் தொழிற்சங்கத்தை ஆலையில் அங்கீகரித்து பதிவு செய்யாதது குறித்து சி.ஐ.டி.யு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தொழிற்சங்க பதிவு குறித்து தமிழ்நாடு அரசும், பதிவு துறையும் முடிவெடுக்க ஆறு வாரம் கால அவகாசம் கொடுத்திருந்தது. இதையடுத்து, ஆறு வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் கோரி நடந்த போராட்டத்தின் போது தரப்பட்ட வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது.
The post சாம்சங் இந்தியா தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது: தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.