திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு குடவாசல் அடுத்த வடவேரை சேர்ந்த ஜெயராமன் தனது மகள் கவுசல்யாவை பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். இவர் நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீனில் இட்லி வாங்கி வந்து கர்ப்பிணி மகளுக்கு கொடுத்தார். கவுசல்யா பார்சலை பிரித்து சாம்பாரை இட்லி மீது ஊற்றியபோது சாம்பாரில் பல்லி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தந்தை ஜெயராமன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.
மேலும் தாலுகா போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் சம்பந்தப்பட்ட உணவகத்தை பூட்டி சீல் வைத்ததுடன் அங்கு இருந்த உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து டீன் ராஜேந்திரன் கூறுகையில், உணவகத்தில் சம்பவத்தின்போது உணவு அருந்தியவர்களுக்கு இதுவரை எந்தவித தொந்தரவும் இருந்ததாக தகவல் இல்லை. இருப்பினும் உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின் சம்பந்தப்பட்ட உணவகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post சாம்பாரில் பல்லி திருவாரூர் ஜி.ஹெச் உணவகத்துக்கு சீல் appeared first on Dinakaran.