துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் காயம் அடைந்த மேட் ஹென்றிக்கு பதிலாக நேதன் ஸ்மித் களமிறங்கினார். பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறந்த தொடக்கம் கொடுத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டன. தொடர்ந்து முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள் அடிக்க 11 ரன்கள் சேர்க்கப்பட்டன.