சென்னை: “அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப் பெற்றதாகக் கூறி செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன. பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை” என்று காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான காவல் துறை செய்திக் குறிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேகா தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.